திருச்சி மாவட்டம், பச்சை மலையில் உள்ள பழங்குடியின மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பசு மாடு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மொத்தம் 70 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்பட்டன. இதனை அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இணைந்து வழங்கினர். பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மாடுகள், கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் இருந்து பெறப்பட்டன.
அதன்படி, 47 பயனாளிகளுக்கு தலா ஒரு பசு, ஒரு கன்று என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், 5 பயனாளிகளுக்கு தலா இரண்டு காளை மாடுகளும் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு 122 மாடுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, “ரூ.5 கோடி செலவில் தண்ணீர் தூய்மை செய்து வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தூய்மையான குடிநீர் கிடைக்கும். மழை பெய்துவருவதால், நகரம் முழுவதும் தார் சாலைகள் அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பின் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் நகராட்சி நிர்வாகத் துறை கே.என் நேரு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ ஆகிய துறைகளின் வாயிலாக 145 பயனாளிகளுக்கு ரூபாய் 30 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது, தாட்கோ தலைவர் மதிவாணன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.