தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் லட்சக் கணக்கான மாணவ – மாணவிகள் படித்துவருகின்றனர். இவர்களுக்கு இந்தாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்வுக்கு முன்னதாக திருப்புதல் தேர்வு நடக்கவுள்ளது. இந்த திருப்புதல் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரேமாதிரியாக நடத்துகிறது பள்ளிக்கல்வித்துறை. இதற்காக வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. அவை அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பபப்ட்டன. இந்த வினாத்தாள்கள் தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் தனிஅறையில் வைத்து சீல்வைக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கிய தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் கணக்கு தேர்வு தொடங்குவதற்கு முன்பாக வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியான கல்வித்துறை விசாரணை நடத்தியபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இந்த வினாத்தாள் வெளியானது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் விசாரணை நடத்தினார். அதன்படி போளுர் நகரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி, வந்தவாசியில் உள்ள இரு தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பிய வினாத்தாள்கள்தான் லீக்கானது எனத் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையின் தேர்வுகள் கட்டுப்பாட்டு பிரிவின் இணை இயக்குநர் பொன்.குமார் திருவண்ணாமலை கல்வி மாவட்டத்திலும், செய்யார் கல்வி மாவட்டத்திலும் நேரடி விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் அடிப்படையில் பிப்ரவரி 14ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மூலம் வெளியான தகவலில், இந்த இரண்டு பள்ளிகளில் இருந்துதான் வினாத்தாள் வெளியாகியுள்ளது, இந்த பள்ளிகளின் மீதும், வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.