நிலத்தடி நீராதாரத்திற்கு வேட்டு வைக்கும் சவுடு மணல் குவாரியை கிராம மக்கள் சூறையாடியதோடு, அங்கிருந்த கொட்டகைக்கும் தீ வைத்து எரித்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பாகியுள்ளது.
![nagai](http://image.nakkheeran.in/cdn/farfuture/8_nBryboOmSYKR-fRTKOnJa8EbrVRFkL7BwEGaWIhuw/1557664191/sites/default/files/inline-images/adsadsdthh.jpg)
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொண்டங்கி என்கிற கிராமம் உள்ளது. விவசாயம் மட்டுமே பிரதான தொழில், அங்கு கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் சவுடு மணல் குவாரி அமைக்க நாகை மாவட்ட சுரங்க துறையினரிடம் லைசென்ஸ் வாங்கியுள்ளார். இவர் ஏற்கனவே மயிலாடுதுறை கோட்டாட்சியர் எல்லைக்குள் பல்வேறு இடங்களில் சவுடு மணல் குவாரி நடத்தி வருகிறார். ஏற்கனவே கொண்டாங்கி கிராமத்தில் மணல் குவாரி நடத்திய போது அந்த கிராமத்திற்கு செய்வதாக உத்தரவாதம் கொடுத்ததை செய்திடவில்லை, இதனால் அக்கிராம மக்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
![nagai](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y_nUr9FnjCGxYwqMPbA1sVbQbzcCMLxmjZG6enaB4SU/1557664216/sites/default/files/inline-images/yiyidc.jpg)
இந்தநிலையில் கொண்டாங்கி கிராமத்திற்கு மணல் அள்ளுவதற்கு வாகனங்களோடு வந்து மணல் அள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் ஒன்று திரண்டு ஏற்கனவே இந்த கிராமத்திற்கு எதுவும் செய்யாமல் மணலை அள்ளிச்சென்று சம்பாதித்து விட்டு மீண்டும் இங்கே எப்படி வரலாம் என்று திட்டியபடியே, சென்ற மக்கள் லாரிக்கு டோக்கன் கொடுக்கப்போடப்பட்டிருந்த கொட்டகையை அடித்து உடைத்து தீ வைத்தனர், மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகளையும் அடித்து உடைத்து பல்லத்தில் தூக்கி வீசிவிட்டு மணல் அள்ளி கொண்டிருந்த லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
![nagai](http://image.nakkheeran.in/cdn/farfuture/NNOH4umN707RbW9UywoLHykKR6ZpIAEzv2tz4u8YIFw/1557664240/sites/default/files/inline-images/hheh.jpg)
இதுகுறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் சேர்ந்த 13 பேர் மீது ஆயுதங்களுடன் ஒன்றுகூடி தீவைத்தது, வாகனங்களை அடித்து உடைத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, உள்ளிட்ட ஐந்து கிரிமினல் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்தகிராமம் மட்டுமின்றி, சுற்றியுள்ள பகுதிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.