Skip to main content

சிஏஏ போராட்டங்களில் குழந்தைகள்! -ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் என வாதம்!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய அளவிலான குற்றம் என சி.ஏ.ஏ. போராட்டங்களை எதிர்த்த வழக்கில் வாதிடப்பட்டுள்ளது.

 

Children in CAA struggle!- highcourt

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்களால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், காவல்துறை அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்ணன், கோபிநாத், ஸ்ரீதரன், தமிழழகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் கண்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், காவல்துறை அனுமதி இல்லாமல் தமிழகம் முழுவதும் 58 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் போராடி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.  மேலும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதுதான் சரியாக இருக்குமே தவிர, இதுபோன்ற போராட்டம் நடத்துவதை சட்டவிரோதமாகத்தான் கருத வேண்டும் என்று வழக்கறிஞர் பிரபாகரன் வலியுறுத்தினர். தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 83 உட்பிரிவு 2-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், அதன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்தப் பிரிவின் கீழ் காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து,  பிற மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், போராட்டங்கள் தொடர்பான தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அந்த அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 20-ஆம் தேதிக்கு   ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்