![Chief Minister's order to District Collectors](http://image.nakkheeran.in/cdn/farfuture/kVYgfaGZMlO3jktBcyb2dg8lLt7ViFGfQWEYCDIsqw0/1589375068/sites/default/files/inline-images/cm25_1_0.jpg)
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆலோசனை கூட்டத்தின் பின் மக்களுக்கு காணொலி வாயிலாக உரையாற்றினார். அதில்,
சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் வேறு மாவட்டங்களுக்கு கரோனா பரவியது குறித்த அரசின் எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை. சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வியாபாரிகளிடம் பலமுறை கேட்டுக் கொண்டோம். சந்தையை மூடுவது குறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் பலமுறை பேச்சு நடத்தப்பட்டது. தற்காலிக சந்தையில் வியாபாரத்தை தொடங்க அதிகாரிகள் கூறினர். ஆனால் சென்னைக்கு வெளியே அமைக்கும் தற்காலிக சந்தைக்கு செல்ல வியாபாரிகள் விரும்பவில்லை. தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிடும் என அஞ்சி தற்காலிக சந்தைக்கு செல்ல வியாபாரிகள் மறுப்பு தெரிவித்தனர். பலமுறை அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் வியாபாரிகள் அதை ஏற்க மறுத்து விட்டனர். விற்பனை பாதிக்கும் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் இருந்தனர்.
எனவே அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கரோனா தொற்று அதிகரித்தது என்று கூறுவது தவறு. வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை படிப்படியாக அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்கும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஊரடங்கையும் படிப்படியாக தளர்த்திக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் உரிய நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நடவடிக்கையால் எந்த மாவட்டத்திலும் உணவு பிரச்சனை இல்லை.
ஜூலை 1 ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பேருந்து உள்ளிட்ட வசதிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்தி தரவேண்டும். அரசின் உதவிகள் மக்களுக்கு சென்றடைவதையும் ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்ற அவர், இந்த கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.