டெல்டா மாவட்டங்களில் இன்று (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்து 48 மணி நேரத்திற்குள் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதலே சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (27-11-24) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு, ‘ஃபெங்கல்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (26-11-24) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கூறியதாவது, “மழை எச்சரிக்கை மாவட்டங்களில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளநீர் தேங்கி பயிர் சேதமடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வசதி தடையின்றி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கனமழையின் போது மக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து முகாம்களுக்கு அழைத்து வர வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.