கோவையைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் கள ஆய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். பல்வேறு துறைகளின் கீழ் ரூ.321.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.77,12 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகக் கட்டிடத்தையும், ரூ.21.35 கோடியில் முடிவுற்றிருந்த 34 புதிய கட்டிடங்களையும் திறந்துவைத்தார். ரூ.417.21 கோடி மதிப்பீட்டில் 57,556 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.837.66 கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கினார். அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பில் ரூ.350 கோடியில் சிப்காட் அமைக்கப்படும் என்றும் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளுக்கு, அம்மக்களின் நீண்டகாலக் கனவாக இருந்த வைகை நிரந்தரக் குடிநீர்த் திட்டம், ரூ.75.85 கோடியில் உரிய நிதி ஆதாரங்களின் கீழ் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.
இரண்டு நாள் பயணத்தில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டது, பட்டாசுத் தொழிலாளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது, பட்டாசுத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பட்டாசு விபத்தில் உயிரிழப்போரின் குழந்தைகளுடைய படிப்புச் செலவை அரசாங்கமே ஏற்கும் என்று அறிவித்தது, அரசு குழந்தைகள் காப்பகம் சென்று கேக், பிஸ்கட் மற்றும் பழங்களை மாணவிகளுக்கு வழங்கியது என நெகிழவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இம்மாவட்டத்தில் தான் பங்கேற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் டச்சிங்காக அமைந்துவிட, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை “மருது சகோதரர்கள் போல இந்த மண்ணுக்குத் தூணாக விளங்கக்கூடிய மாவட்டச் செயலாளர்கள்..” எனப் பாராட்டியதோடு “விருதுநகர் மாவட்டத்தில் புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், கல்லூரி கனவுத் திட்டங்களில் அதிகளவு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இதற்காகவே, விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனுக்கு நல் ஆளுமை விருது வழங்கினோம்.” என்று ஆட்சியரையும் வாழ்த்தினார்.
ஆட்சிக்கான கள ஆய்வோடு, கட்சிக்கான கழக ஆய்வும் சேர்ந்து நடத்தினால்தான், பயணத்தின் நோக்கம் முழுமையாகும் என்ற திட்டமிடலுடன் விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகளைச் சந்தித்து, 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியபோது, “அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒருவகையில் பயன்பெறுகிறது. இதை மக்களுக்கு உணர்த்தும் விதத்தில் நமது பிரச்சாரம் அமையவேண்டும். இளைஞர்கள்தான் எதிர்கால விதைகள். இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் நேரில் சந்தித்து அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை விளக்கவேண்டும். விருதுநகரில் உள்ள 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும். ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமையவேண்டும்.” என்று உற்சாகப்படுத்தினார்.
‘விருதுநகர் மாவட்டத்தின் மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்துவது ஏன்?’என்ற கேள்வியுடன் திமுக முக்கிய நிர்வாகி ஒருவரைச் சந்தித்தபோது, “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தளபதி ரொம்பவே மாறிவிட்டார்.” என்று சிலாகித்தபடி பேசினார். “உண்மையான காரணம்னு சொன்னா.. கடந்த எம்.பி. தேர்தல்ல தமிழ்நாட்டுல ரொம்பவும் குறைஞ்ச ஓட்டுல.. வெறும் 4379 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சாரு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர். ரிசல்ட் சொன்னப்ப.. கடைசி வரைக்கும் இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருந்தது, தளபதி மனசை ரொம்பவே உறுத்திருச்சு. ரெண்டு அமைச்சர் இருந்தும்.. திட்டங்கள் மூலம் மக்களுக்கு இத்தனை வசதி பண்ணிக் கொடுத்தும்.. இந்தமாதிரி ஏன் நடந்துச்சுங்கிற கேள்வி இன்னும் இருந்துக்கிட்டே இருக்கு. இந்த மாவட்டத்துல தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கிற இடத்துல பட்டாசுத் தொழிலாளர்களோட வாக்குகள் இருக்கு. இன்னொரு விஷயம்.. சிவகாசி திரைப்படம் ரிலீஸுக்கு முன்னால ப்ரமோஷனுக்காக.. 2005ல இங்கேயிருக்கிற பட்டாசு ஆலைக்கு வந்தாரு விஜய்.. அப்ப பட்டாசுத் தொழிலாளர்களை சந்திச்சாரு. இது நடந்து 19 வருஷமாச்சு. இப்ப விஜய் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. இத எல்லாம் கணக்குப் போட்டுத்தான்..
இதுவரைக்கும் எந்த முதலமைச்சரும் கால் வைக்காத பட்டாசு ஆலைக்குள்ள சி.எம்.ங்கிற கெத்தோடு போயிருக்காரு எங்க தளபதி. பலவீனமா இருக்கிற இந்த மாவட்டத்தைச் சரி பண்ணுனா தமிழ்நாட்டையே சரி பண்ணுன மாதிரின்னு அவரு மனசுல தோணிருக்கும் போல.
மொத நாள்.. மாவட்ட எல்லைல தொகுதி வாரியா தளபதிக்கு வரவேற்பு கொடுத்தாங்க. இதுல அதிகளவு வாகனங்கள்ல தொண்டர்களைக் கூட்டிட்டு வந்தது ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன். தளபதி அந்த இடத்தை க்ராஸ் பண்ணும்போது.. தளபதி வாழ்க.. தங்கப்பாண்டியன் வாழ்கன்னு ரெண்டு பேருக்கும் சேர்த்தே வாழ்த்து கோஷம் போட்டாங்க, இப்படி பண்ணுறத மாவட்டச் செயலாளர்கள் விரும்பமாட்டாங்க. ஆனா தளபதி.. அவங்க எழுப்புன வாழ்த்து கோஷத்தை ரசிச்சாரு. நெறயப் பேரை யாரு கூட்டிட்டு வந்தாங்கிறது அவருக்குத் தெரிஞ்சிருக்கும். நிர்வாகிகள் கூட்டத்துலயும்.. ராஜபாளையம் தெற்கு ஒன்றியம், வடக்கும் ஒன்றியம், செட்டியார்பட்டி பேரூராட்சி மூன்றையும் சொல்லி, அதிகளவு நிகழ்ச்சிகள் நடத்தி மினிட்ஸ்ல பதிவு பண்ணிருக்காங்க. 33 நிகழ்ச்சிகள் வரைக்கும் நடத்திருக்காங்க. கடந்த நாலு தேர்தல்லயும் ஓட்டு வாங்குறதுல முன்னிலைல இருக்காங்க. இப்படித்தான் செயல்படணும்னு சொல்லி.. தங்கப்பாண்டியன் எந்திரிச்சு நில்லுங்கன்னு சொன்னதோடு, வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்னு முகம் மலரச் சொன்னார் தளபதி.
சிவகாசி ஒண்ணாம் பகுதில ஓட்டு நல்லா வாங்கிருக்கீங்க. ஆனா.. நிகழ்ச்சியே நடத்தல. மூணு நிகழ்ச்சிதான் மினிட்ஸ்ல இருக்கு. இது சரியில்ல. ஆட்சிக்கு உதவியா இருக்கிற மாதிரி கட்சிக்கும் உதவியா இருக்கணும். ஒரு பிட் நோட்டீஸ்.. ஒரு தெருமுனைக்கூட்டம், 50 பேரு வந்தாக்கூட போதும்.. ஒரு மீட்டிங் நடத்தி.. அந்த நிகழ்ச்சியை மினிட்ஸ்ல பதிவு பண்ணுங்கன்னு அட்வைஸ் பண்ணுனார் தளபதி.
திமுகவுல இளைஞரணி, மகளிரணின்னு 23 அணிகள் இருக்கு. அதுனால.. கட்சில இருக்கிற 100 பேருக்கும் ஏதாவது ஒரு அணியில் பொறுப்பு கிடைச்சிருக்கும். எல்லா அணியையும் நல்லா வேலை வாங்குங்க. யாரா இருந்தாலும், அவங்க தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப செயல்பட்டு, தனியா மினிட்ஸ் போட்டுக்கங்க. பெரிய பொறுப்புல இருக்கவங்க.. கீழே இருக்கவங்கள நல்லா வேலை வாங்கி, கட்சிக்கு உழைப்பாளியா மாத்துங்க. அந்த மாதிரி உழைக்கிறவங்க,, உங்களுக்கு போட்டியா வந்திருவாங்கன்னு நினைக்காதீங்கன்னு.. தளபதி ரொம்ப அழகா பேசினாரு ஆனா.. இதெல்லாம் நடக்கணும்ல?” என்று நடப்பு அரசியலை அறிந்து பேசிய அந்த நிர்வாகி “தளபதி ரொம்ப தெளிவா இருக்காரு.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஸ்டைல்ல பட்டைய கிளப்புறாரு.
திமுகவுக்கு பெண்கள் வாக்கு வங்கி நிரந்தரமா இருக்கணும்கிற ஒரே சிந்தனையோடு அரசுத் திட்டங்களை செயல்படுத்துறாரு. அதுல வெற்றியும் கிடைச்சிட்டு வருது. இதுல ஒரே ஒரு குறை. மதுவிலக்கு குறித்து திமுக தரப்புல மேல இருக்கவங்களோ, கீழ இருக்கவங்களோ, ஒரு வார்த்தைகூட பேசல. அந்த நினைப்பே இல்ல.. ஏன்னா.. மதுவிலக்குன்னு சொன்னா.. குடிக்கிற ஆண்கள் ஓட்டு விழாம போயிரும். இது தேர்தல் அனுபவத்துல திமுக தெரிஞ்சுகிட்ட விஷயம். அதனால.. மதுவிலக்குங்கிற பேச்சுக்கே திமுகவுல இடம் இல்ல.” என்று நேர்மையாகப் பேசினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து, அரசியல் களத்தில் யாரும் நெருங்கமுடியாத அளவுக்கு, இப்போதிருந்தே பீடுநடை போட ஆரம்பித்திருக்கிறார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.