![Chief Minister praises Sulur Inspector](http://image.nakkheeran.in/cdn/farfuture/eOkD1JeaGT-gdtBJaWE383YHgTJVRzuFt2wTz-LV_RU/1637913388/sites/default/files/inline-images/cm-kovai-ins.jpg)
கடந்த சில நாட்களுக்கு முன்பு பைக் திருடன் ஒருவனை துரத்திப் பிடித்த சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் சூலூர் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர். அப்போது அவர்களில் ஒருவன் காவல் ஆய்வாளர் மாதையனை தட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். மாதையன், தப்பி ஓடிய நபரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம்வரை ஓடிச்சென்று விரட்டிப் பிடித்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இதுகுறித்து பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அரசு முறை பயணமாக கோவைக்கு வந்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து, வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் வழங்கினார். அந்தக் கடிதத்தில், ‘சட்டம் - ஒழுங்குக்குச் சவால்விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குரிய சூழலை உறுதிசெய்வதே காவல்துறையின் முதன்மைப் பணியாகும்.
அத்தகைய பணியைத் திறம்படச் செய்யும் சீருடைப் பணியாளர்கள் மக்களின் உண்மை நாயகர்களாகி பெருமதிப்பினைப் பெறுகிறார்கள். தங்கள் சட்டை கிழிந்த நிலையிலும், ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அவர்களில் ஒருவரைத் தாங்களும் காவலர்களும் பிடித்திருக்கிறீர்கள். அந்த நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மற்றொரு நபரையும் அடையாளம் கண்டு, இருவரையும் கைதுசெய்து, அவர்கள் வசமிருந்த திருட்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்திருக்கிறீர்கள். மக்கள் உழைத்துச் சம்பாதித்த மோட்டார் சைக்கிள்களைத் திட்டமிட்டுத் திருடிவந்த நபர்களை தாங்கள் உயிருக்கு அஞ்சாமல் போராடிச் சட்டத்தின் முன் நிறுத்தியதன் மூலம், மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள். தங்களின் துணிச்சல் மிக்க செயல்பாடு, காவல்துறையில் உள்ள நேர்மையான துணிச்சலான அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும்’ என்று அந்த வாழ்த்து மடலில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.