வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில் சென்னை கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கேட்டறிவதோடு, ஆய்வு நடத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, அமைச்சர் கே.என்.நேரு, அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கு உள்ளனர். வடசென்னை பகுதியான கண்ணப்பர் திடல் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வரை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சிந்தாதரிபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தமிழக முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.