![edapadi](http://image.nakkheeran.in/cdn/farfuture/H5PCClmpqfNvqerLbdE-cfLrtJsmCkeEhJzayuEo-Zc/1535572702/sites/default/files/inline-images/IMG_20180829_161742150.jpg)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை மாவட்டம் திருக்கடையூர் நடைபெறும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரின் மகன் திருமணத்திற்கு செல்வதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியாக புதன்கிழமை மாலை சென்றார். இவரை கடலூரில் அமைச்சர் சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்பு செழியன் ஆகியோர் வரவேற்று பூங்கொத்து அளித்தனர். இதனை தொடர்ந்து சிதம்பரம் வண்டி கேட்டு பகுதியில் கடலூர் எம்பி அருண்மொழித்தேவன் சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன்கா, கட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் உள்ளது. மழை நீரை சேமிக்க குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் அதிக மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதுபோன்ற நிலை ஏற்படாது, அதிக மழை பெய்யும் போது வெள்ளம் ஏற்படுவது இயற்கை., தமிழகத்தில் அதை சமாளிக்க அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான ஆறு, ஏரி குளங்கள், தூர் வாரப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 318 கோடி மதிப்பீட்டில் 1500 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதனால் தண்ணீரை அதிக அளவில் சேமித்துவைக்கப்படுகிறது. கடைமடைவரை தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இந்தத் திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். பல ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக விவசாயிகளுக்கான எந்த பிரச்சினையும் சரிசெய்யவில்லை. உச்ச நீதிமன்றம் மூலம் அதிமுக அரசு விவசாயிகளின் உரிமைகளை மீட்டு தந்துள்ளது என்றும் கூறினார்.
முன்னதாக தமிழக முதலமைச்சர் தங்கும் பொதுப்பணித்துறை விடுதிக்கு 100 மீட்டர் தூரத்தில் அரசு பெண்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது முன்னறிவிப்பின்றி விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல் சிதம்பரம்- சீர்காழி சாலையில் அமைந்துள்ள சுவாமி சகஜானந்தர் மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருகிறார் என்று அரசு சார்பில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்எல்ஏ முருகுமாறன் ஆகியோர் மணிமண்டப ஒருங்கிணைப்பு குழு மற்றும் நந்தனார் கல்விக்கழக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து மணிமண்டபத்தில் முதல்வரை வரவேற்க சால்வை மற்றும் மாலைகளுடன் மணிமண்டப ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சிகளை சார்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தனர். ஆனால் முதல்வரோ மணிமண்டப வழியாக சென்றும் மணிமண்டபத்திற்கு வரவில்லை. இதனால் மணிமண்டபத்தில் கூடியிருந்த நிர்வாகிகள் முதல்வர் மீது விரக்தி அடைந்து அதே இடத்தில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருந்தனர். பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் உள்ளிட்டவர்கள் சமாதனம் செய்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.