Skip to main content

வெகு விமர்சையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

chidambaram natarajar temple aruthra tharisana festival 

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில், ஸ்ரீ சிவகாமசுந்தரி நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் விபூதி, பால், தயிர், தேன், சந்தனம், பழச்சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் பஞ்சமூர்த்திகள் கிழக்கு சன்னதி வழியாக, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, மீண்டும் கிழக்கு சன்னதி வழியாக கோவிலுக்குள் வந்து ஆயிரம் கால் மண்டபம் முன்பு நின்று தரிசன காட்சி நடைபெற்றது.

 

இதனையடுத்து கோவில் ராஜ சபையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க தேவாரம், திருவெம்பாவை, பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து மூலவர் ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் எழுந்தருளி சபைக்கு புறப்பட்டனர். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நடன பந்தலுக்குள் மூலவர் ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை தொடர்ந்து அங்கு பெரும் திரளாக திரண்டு இருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா, என்றும் ஹர ஹர கோஷங்கள் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். இந்த தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் அதிகமாக காணப்பட்டது. மேலவீதி கோபுர வழியிலும், சிவகங்கை குளம் அருகிலும் சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் அருகிலும், கீழ சன்னதி, ஆயிரங்கால் மண்டபம் முன்பும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலில் உள்ள அனைத்து இடங்களிலும் பக்தர்கள் திரண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து மாலை ஆனந்த நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் கோயில் உள் பிரகாரத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து கருவறையில் வைத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர், பக்தர்கள், வெளியூர் பக்தர்கள், வெளி மாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்கள், வெளிநாட்டு  பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.

 

மேலும் காவல்துறை சார்பில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எடுத்தும் வகையில் பாதுகாப்போடு தரிசனத்தை கண்டு சொல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மேற்பார்வையில், சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்