கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த அவருடைய தோழி சுவாதிக்கு பிடிஆணை பிறப்பித்து, நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றம் புதன்கிழமை (பிப்ரவரி 20, 2019) உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். அவர், தன்னுடன் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்ததாகவும், அதனால் கோகுல்ராஜை சாதிய ஆணவத்துடன் சிலர் கொலை செய்திருக்கலாம் என்றும் அப்போது புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்தனர். கோகுல்ராஜ் வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் கடந்த 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.
கோகுல்ராஜின் தோழியான சுவாதியை, இந்த வழக்கில் அரசுத்தரப்பு முக்கிய சாட்சியாக சிபிசிஐடி காவல்துறையினர் கருதினர். ஆனால் அவரோ, கோகுல்ராஜை தன்னுடன் படித்த மாணவர் என்ற ரீதியில் மட்டுமே தெரியும் என்றும், நானும் கோகுல்ராஜூம் 23.6.2015ம் தேதியன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றதாக சொல்வதில் உண்மை இல்லை என்றும், தான் அந்தக் கோயிலுக்குச் சென்றதே இல்லை என்றும் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்தார்.
இதற்கிடையே, சுவாதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில், சுவாதியை மறு விசாரணைக்கு அழைக்கக்கோரி சிபிசிஐடி தரப்பில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நாமக்கல் மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோதெல்லாம் சுவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், மீண்டும் அந்த வழக்கு புதன்கிழமை (பிப்ரவரி 20, 2019) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றும் சுவாதி ஆஜராகவில்லை. இதையடுத்து நீதித்துறை நடுவர் வடிவேல், சுவாதியை கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், அவரை வரும் மார்ச் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சுவாதி தரப்பை கலக்கம் அடையச் செய்துள்ளது.
சாட்சிகள் விசாரணை ஒத்திவைப்பு:
கோகுல்ராஜ் வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் இன்று விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ணலட்சுமண ராஜூ வராததால், சாட்சிகள் விசாரணையை வரும் 27.2.2019ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் உத்தரவிட்டுள்ளார்.