சென்னையில் வசித்து வந்த கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அன்சர்மீரான் (வயது 29) என்பவர் சிரியாவில் செயல்படும் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.சுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்சர்மீரான் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலையடுத்து அவர் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் அன்சர்மீரானை வருகிற 3-ஆம் தேதிக்குள் சிறையை தகர்த்து கடத்த போவதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த மிரட்டலை தொடர்ந்து மாநில உளவுத்துறை போலீசாரை உஷார்படுத்தியதுடன் தமிழக சிறைத்துறைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நேற்று இரவு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அலுவலர்களுடன் அதிரடி சோதனை செய்தார். கைதிகள் தங்கியுள்ள அறைகள், சிறை வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர்.
அதேசமயம் கடலூர் முதுநகர் காவல்துறையினர் மத்திய சிறைச்சாலைக்கு செல்லும் வண்டிப்பாளையம் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படையினர் சிறைச்சாலையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு சிறைத்துறை அதிகாரிகள் சிறையை ஆய்வு செய்து கொண்டிருந்த போது மயிலாடுதுறை அடுத்த நீடுரை சேர்ந்த மன்சூர்அலி (வயது 52) என்ற ஆயுள் தண்டனை கைதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருக்கும் போதே, கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.