சேலத்தில் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதி கழிப்பறையில் இருந்து கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் கோரிமேட்டில், மத்திய சட்டக்கல்லூரி என்ற பெயரில் தனியார் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படித்து வரும் மூன்று மாணவர்கள், ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தனர். அந்த வழக்கில் அவர்கள் சேலம் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாததால், அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் மற்ற மாணவர்களுக்கும் கஞ்சா விநியோகம் செய்து வருவது தெரிய வந்தது.
சட்டக்கல்லூரியில் படிக்கும் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், கல்லூரி அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் தலைமையில், கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கவேல் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட போலீசார், மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் நேற்று திடீரென்று சோதனை நடத்தினர். ஒரு கழிப்பறையில் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் கைப்பற்றினர்.
கஞ்சாவை பயன்படுத்தியது யார் என்று தெரியவில்லை.இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை வாங்கியது யார்? அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.