இயற்கைச் சீற்றங்களால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மீனவர்களை, புதுப்புது சட்டங்களை அறிமுகம் செய்து மேலும் வஞ்சிக்கிறது அரசு. கடற்கரைப் பாதுகாப்பு என்ற பெயரில் மீனவ மக்களை வெளியேற்றும் முயற்சியில் பல்வேறு திட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீனவர்கள் அமைப்பின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்ட கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தையும் அதன் கருத்து கேட்பு கூட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் பங்கேற்ற மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம், ‘தமிழ்நாடு அரசு இணையதளத்தில் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (CZMP) குறித்து மக்களின் கருத்து கேட்புக்காக வரைபடம் வெளியிடப்பட்டது. அந்த வரைபடமானது சட்டவிரோதமான முறையில், முழுமையற்று இருப்பதால் அதை அகற்றிவிட்டு முழுமையான வரைபடம் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மேலும், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுகளுக்கு எதிராக அந்த வரைபடங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வரைபடத்தில் அபாய கோடுகளை குறிப்பிடவில்லை. அந்த அபாயக்கோடு என்பது கடல் மட்ட உயர்வால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சுட்டிக்காட்டுவதாகும். அந்த அபாய கோட்டுக்குள் வாழும் மக்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்யவேண்டும். இந்த அபாய கோடுகளை குறிப்பிடவில்லை என்றால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, அந்த அபாய பகுதிகள் கட்டுப்பாடு அற்ற வளர்ச்சி ஏற்பட வழிவகையாகும்.
2017 நவம்பர் மாதம் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், ‘மூன்று மாத காலத்திற்குள் அபாயக கோடுகளை குறிப்பிட்டு புதிய வரைபடத்தை வெளியிட வேண்டும். 2006 சுற்றுசூழல் சட்டத்தின்படி திட்டம் முழுமையாக்கப்பட்ட பின்னரே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறது. அடுத்து ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கும் இந்த திட்டத்தை தமிழில் வெளியிட்டு அதன் பின்னரே மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் என்பது நடத்தப்பட வேண்டும். இதில் அனைத்து விதமான சட்டவிதிகளையும் மீறி, இந்த திட்டத்திற்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றி விடவேண்டும் என்று அரசு முயற்சி செய்துவருகிறது. அதை கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம்’ என்றார்கள்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்த மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். பிரதிநிதிகளிடம் அரசுக்கு உங்கள் கோரிக்கையை எடுத்துச்செல்வதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
Published on 25/04/2018 | Edited on 25/04/2018