உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்படவேண்டும் என்று வலியறுத்தும் அதேநேரத்தில், தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அதன் வளர்ச்சியில் அக்கறை காட்டாமலும், செம்மொழி நிறுவனத்தை சிதைக்கும் வகையிலும் மத்திய அரசு நடந்துகொள்வதும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க. அரசும் அதற்குத் தலையாட்டுவதும் கண்டிக்கத்தக்கது என்று மொழி உணர்வோடு விளையாடிப் பார்த்தால், தமிழ்நாட்டு மக்கள் எரிமலையாக வெடிப்பார்கள் என்று எச்சரிக்கிறோம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை:
’’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடுவது என்ற ஓர் அறிவிப்பு நேற்று வெளிவந்தது. அந்த அறிவிப்பில் உலகில் மூத்த மொழிக்குச் சொந்தக்காரர்களான தமிழ்நாட்டு மக்கள் - அவ்வாறு வெளியிடப்பட்ட மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆங்கிலம் தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா, அசாமி மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் மொழி பெயர்ப்பு வெளிவரும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் பிற மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு மொழியாக்கம் செய்வது வரவேற்கத்தக்கது என்று பாராட்டியதோடு, உலகின் மூத்த மொழியான செம்மொழியான தமிழ் அந்த மொழியாக்கப் பட்டியலில் இடம்பெறாததைக் குறிப்பிட்டு அந்தப் பட்டியலில் தமிழ் இடம் பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அந்தப் பட்டியலில் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது என்று இன்று ஒரு சில ஏடுகளில் செய்தி வெளிவந்திருப்பது உண்மையானால், அதனை மகிழ்ந்து வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
அதேநேரத்தில், செம்மொழி தமிழின் இன்றைய நிலை என்ன? முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் முழு முயற்சியினால் தமிழ் செம்மொழி என்று மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தமிழ் செம்மொழியாக்கப்பட்ட காரணத்தால்தான் அதனைத் தொடர்ந்து சமஸ்கிருதம் முதலிய மொழிகளும் செம்மொழி தகுதி பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
1918 மாரச் 30, 31 ஆகிய நாள்களில் நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் மாநாட்டிலேயே தமிழ் செம்மொழி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது - திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வந்த கலைஞர் அதனைச் சாதித்துக் காட்டினார்.
1. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையிலும், செம்மொழி ஆய்வுத் தொடர்பான வளர்ச்சிப் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை எண்ணிப் பார்த்தால், உள்ளத்தில் உதிரம்தான் கொட்டுகிறது.
மத்திய அரசின் அலட்சியம்!
2. நிரந்தர இயக்குநர் என்பது குறைந்தபட்ச ஏற்பாடுகூட நடக்கவில்லை! தமிழ் செம்மொழி நிறுவனத்தின் தலைவராக முதலமைச்சரே இருந்தாலும், அது மத்திய அரசின் ஆளுகையின்கீழ்தான் உள்ளது.
இந்த நிறுவனத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிப்பது என்பது அடிப்படையான ஒன்று. அதனைக் கூட செய்ய மத்திய அரசு முன்வரவில்லையென்றால், அதன் காரணம் என்ன? தமிழ் என்றால், அவ்வளவு அலட்சியம். இளக்காரம் என்பதல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?
பொறுப்பு இயக்குநராக தமிழுக்கு எந்த வகையிலும் தொடர்பே இல்லாத ஒருவரை (திருச்சி என்.அய்.டி.யின் பதிவாளரை) நியமித்ததன் நோக்கமென்ன?
அலட்சியம் என்பதைவிட அசிங்கப்படுத்துவதுதானே இதன் பின்னணி?
மத்திய பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் முயற்சி
3. 150 நிரந்தரப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய நிறுவனத்தில் 40 பேர் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றும் அவலம். போதிய நிதியை ஒதுக்காமல் ஏனோ தானோவென்று நடத்தும் அலட்சியம்!
அதை ஒரு தினக்கூலி நிறுவன நிலைக்குத் தாழ்த்தியுள்ளதைப் போக்கி, உரிய தனித்து இயங்கும் அமைப்பாக ஆக்கிட அனைத்துக் கட்சி, அமைப்புகள் குரல் கொடுக்கவேண்டும்.
4. போதும் போதாதற்கு இந்தத் தனித்தன்மையான நிறுவனத்தை மத்திய பல்கலைக் கழகத்தோடு ஒரு துறையாக இணைக்கப்படும் முயற்சி ஒரு பக்கம், தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை இனமான உணர்வையும், மொழி உணர்வையும், சுயமரியாதையையும் சீண்டிப் பார்க்கும் இத்தகைய கீழிறிக்கச் செயல்களில் ஈடுபட்டால், எதிர்விளைவு கடுமையாக இருக்கும்.
மொழிப் பிரச்சினை தமிழ் மண்ணில் எப்பொழுதுமே அணையாத எரிமலைச் சீற்றம். இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு ஒரு பக்கம், செம்மொழி தமிழை அலட்சியப்படுத்தும் - இழிவுபடுத்தும் போக்கு மற்றொரு பக்கம்! தமிழ்நாடு இதனை அனுமதிக்காது! அனுமதிக்கவே அனுமதிக்காது!!
தி.மு.க. ஆட்சியில் செம்மொழி என்ற தகுதி கிடைத்த ஒரே காரணத்தால், அ.தி.மு.க. அரசு மத்திய அரசோடு சேர்த்து தாளம் போடுமானால், தமிழ்நாடு மக்களின் போராட்டப் புயலில் மத்திய அரசோடு, மாநில அரசும் வேரற்று வீழும் என்று எச்சரிக்கின்றோம்.’’