கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தின் அருகில் இந்திரா நகர் உள்ளது. இதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் வசிக்கும் பொதுமக்கள் ரயில் நிலையத்தின் வழியாக சென்று வந்தார்கள். இந்நிலையில் திங்களன்று நகருக்கு செல்லும் வழியில் ரயில்வே நிர்வாகம் சுற்றுசுவர் எழுப்பி தடையை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையறிந்த அந்த பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா தலைமையில் ரயில்நிலையம் அருகே ஒன்று திரண்டு நகருக்கு செல்லும் பாதையை ரயில்வே நிர்வாகம் அடைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் கனகராஜை சந்தித்து மனுகொடுத்தனர்.
பின்னர் இதுகுறித்து மூசா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதையை அடைத்துவிட்டால் இவர்கள் 10கி.மீ தூரம் சுற்றி இந்த ரயில் நிலையத்திற்கு வரவேண்டும். அதுமட்டுமல்ல மருத்துவமனை, பள்ளிக்கூடம் என அருகில் சென்று வந்ததை விடுத்து 10 கி,மீ சுற்றி செல்லும் அவல நிலையும் ஏற்படும் என ரயில்வே நிர்வாகம் இந்த பாதையை அடைக்காமல் அவர்கள் எப்போதும் போல சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து,தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்புலட்சுமி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.