காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் வரைவு செயல்திட்டம் ஒன்றை ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. பின்னர் சுப்ரீம் கோர்ட் மே 3-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதை மத்திய அரசு தாமதப்படுத்தி வந்தது.
கடந்த 7-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, மத்திய அரசு மேலும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரி புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தது. 8-ந் தேதி இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதன்படி, இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
காவிரி தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்றுவரை நடைபெறவில்லை என்ற போதிலும், அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதால், வரைவுத்திட்ட அறிக்கை நேரடியாக நீதிமன்றத்தில் இன்று தாக்கலாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தாமதிப்பதற்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலும் நிறைவடைந்து, முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இனி தாமதிப்பதற்கு எந்த காரணங்களும் இல்லை என்பதால் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.