Skip to main content

சமையல் காஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு! நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தி

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
gas




நடப்பு அக்டோபர் மாதத்திற்கான வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை கடந்த மாதத்தைக் காட்டிலும் மேலும் 58 ரூபாய் அதிகரித்து, 916.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி, உள்நாட்டில் சிலிண்டர்களுக்கான தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 


வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுகிறது. அதனால் முழு தொகையை காஸ் முகவர்களிடம் செலுத்தி, சிலிண்டரை பெற்று வருகின்றனர்.


கடந்த செப்டம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 858.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது, முந்தைய ஆகஸ்ட் மாத விலையைக் காட்டிலும் 30.50 ரூபாய் அதிகம். இந்த நிலையில் நடப்பு அக்டோபர் மாதத்திற்கு இந்த சிலிண்டர் விலை மேலும் 58 ரூபாய் அதிகரித்து, 916.50 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த புதிய விலை அமலில் இருக்கும்.


அதேபோல், டீக்கடைகள், உணவக தயாரிப்புக்கூடங்கள் போன்ற இடங்களில் வணிக பயன்பாட்டுக்காக உள்ள 19.2 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நடப்பு அக்டோபர் மாதத்தில் 1570 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 87 ரூபாய் அதிகமாகும். 


காஸ் சிலிண்டர்கள் விலையேற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்