சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தினர்.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை விடுவிக்க கோரியும் இஸ்லாமிய பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான சூழல் நிலவுவதால் அந்த பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
![chennai peoples caa issues police all over district](http://image.nakkheeran.in/cdn/farfuture/MR3LDaCtcQzCdqTBqr9teLg01vWxwudu_eF9l5M18kg/1581700700/sites/default/files/inline-images/chennai12.jpg)
இந்த போராட்டத்தில் நடந்த கல்வீச்சில் படுகாயமடைந்த சென்னை மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
![chennai peoples caa issues police all over district](http://image.nakkheeran.in/cdn/farfuture/_SwAEfVnoaqfUJc6iUESpaosz8oZdidYnIqmrVn2y3Y/1581700714/sites/default/files/inline-images/chennai8.jpg)
இதனிடையே சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஆலந்தூரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கிண்டி, விமானம் நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை தடியடியை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொது மக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.