சென்னை கொளத்தூர் தென் பழனி நகர் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் நலக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தின் காப்பாளராக அகஸ்டின் (வயது 72) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசு அங்கீகாரம் பெற்ற இந்த குழந்தைகள் நலக் காப்பகத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த ஆதரவற்ற 5 வயது முதல் 15 வயது வரை உள்ள 14 ஆதரவற்ற சிறுவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு தங்கியிருந்த 13 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் குழந்தைகள் உதவி மையத்திற்குத் தொடர்பு கொண்டுள்ளான். அப்போது காப்பகத்தில் உள்ள காப்பாளர் அகஸ்டின் என்பவர் தனக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகத் தெரிவித்து இருக்கிறான். இதனைக் கேட்டு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிறுவனின் புகாரின் பேரில் சமூக நலத்துறை மற்றும் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காப்பகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுவன் கூறிய புகார் உண்மை எனத் தெரியவந்தது.
இதையடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் இது குறித்து புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அகஸ்டின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் காப்பகத்தில் மற்ற சிறுவர்களுக்கும் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.