சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை நேற்று (25.12.2024) இரவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் எப்.ஐ.ஆர். எப்படி இணையத்தில் வெளியிட்டது?. பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை கூட முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசின் காவல்துறைக்கு தெரியாதா?. கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவனை இத்தனை நாட்கள் சுதந்திரமாக நடமாடவிட்டதற்கு திமுக அரசின் காவல்துறையே முழு பொறுப்பு.
ஞானசேகரன் திமுக உறுப்பினரே இல்லை என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவர் திமுகவின் பகுதி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளதற்கான திமுக நோட்டிஸ், முரசொலி நாளேடு செய்தி உட்பட பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. கைது செய்யப்பட்ட ஞானசேகரன், நேற்று இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவ்வளவு முக்கியமான வழக்கின் குற்றவாளியை எதற்கு காவல்துறை விடுவிக்க முயற்சித்தது?. ஆளுங்கட்சியான திமுகவில் ஞானசேகரன் பொறுப்பில் இருப்பதை இத்துடன் பொருத்திப் பார்த்தால், இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் மேலும் வலுக்கிறது.
எப்.ஐ.ஆரில் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. யார்அந்த நபர்?. யார் அந்த சார்?. யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த திமுக அரசு?. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசின் பொறுப்பு. இனி இந்த வழக்கை திமுக அரசின் காவல்துறை விசாரிப்பதற்கு தார்மீகத் தகுதியில்லை. எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.