![chennai highcourt](http://image.nakkheeran.in/cdn/farfuture/tJiADk-stNAGireaz1s5LL_CNKWaXYOUdv2oVYyUSnc/1601662135/sites/default/files/inline-images/zcdafsfsf.jpg)
தமிழகத்தில் காவல்துறை துணை ஆணையர்களை, நிர்வாகத்துறை நடுவராக நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் செல்லுமா, செல்லாதா என முடிவெடுக்க, தனி அமர்வு அமைத்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த தேவி என்பவர், எதிர்காலத்தில் நன்னடத்தையுடன் நடப்பதாகக் கூறி, இரு நபர் உத்தரவாதத்துடன் பிணைப்பத்திரம் ஒன்றை 2019 டிசம்பர் 16-ல் எழுதிக் கொடுத்துள்ளார்.
ஆனால், அடுத்த ஐந்தாம் நாளான டிசம்பர் 21-ல் கஞ்சா வைத்திருப்பதாக, மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், பிணைப்பத்திரத்தை மீறியதாகக் கூறி, தேவியை ஒராண்டு சிறையில் அடைக்க நிர்வாகத்துறை நடுவரான (எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்) காவல்துறை துணை ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தேவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், மாவட்ட காவல்துறை சட்டப்படி, காவல்துறையினருக்கு நீதித்துறை அதிகாரம் வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளதால், தேவியை சிறையில் அடைக்கும்படி எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக நலனுக்காக, காவல்துறை சட்டத்தில் எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்டுக்கு நீதித்துறை அதிகாரத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது. அந்த அதிகாரத்தின் கீழ் மகாத்மா காந்தி, வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் விடுதலைக்குப் பின், நிர்வாகம் மற்றும் நீதித்துறை அதிகாரங்களைப் பிரிக்கும் வகையில், சட்டமேதை அம்பேத்கரால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 50-வது பிரிவு உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில், அதிகாரங்களைப் பிரித்து தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ராஜாஜி அரசாணை பிறப்பித்தார்.
மேலும், காவல் துணை ஆணையராக இருப்பவரை எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்டாக நியமித்து, 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள், ராஜாஜி கொண்டுவந்த அரசாணைக்கு விரோதமானது. துணை ஆணையருக்கு எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் அந்தஸ்து கொடுப்பதைத் தொடர்ந்து அனுமதித்தால், வரலாறு மீண்டும் திரும்பிவிடும். இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது. அதிகாரப் பகிர்வு திட்டத்திற்கு முரணாக 2013-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் உள்ளனவா என்பதை ஆராய வேண்டியுள்ளதால், தனி அமர்வு அமைத்து விசாரிக்க, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.