முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது சசிகலா தரப்பில் கூறியதாவது, “அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து பொதுச் செயலாளர் ஆன சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது. இது தொடர்பான நடைமுறையே சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கவோ அல்லது கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து, நீதிபதிக்கும், சசிகலா தரப்புக்கும் காரசார வாதம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தற்போது வரை தொடர்கிறார்கள். அதனால், இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கியது செல்லும்” என்று கூறினார்.
அதே போல், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், “பொதுக்குழு கூட்டங்கள் கட்சி விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டது. அந்த கூட்டங்கள் செல்லும் என்பதை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அடிப்படையிலேயே சசிகலா கட்சியில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்” என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று (05-12-23) பிறப்பித்தனர். அதில், வி.கே.சசிகலா தொடர்ந்திருந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், சிவில் கோர்ட் உத்தரவை உறுதி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். மேலும், அந்த தீர்ப்பில், “அ.தி.மு.க.வில் பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு என்பதால் அதில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரரான சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.