கரோனா அச்சுறுத்தல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அமர்வு முன் இன்று (08/06/2020) விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையின்போது முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் இவைதான்-
வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ: மே 20- ஆம் தேதி அறிவித்தபோது ஜூன் 15 முதல் தேர்வை நடத்துவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கரோனா பரவலைக் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. ஆசிரியர்கள் காத்திருப்புக் கூடங்களில் தனி மனித இடைவெளி சாத்தியமில்லை. மார்ச்சில் நடத்த திட்டமிட்டனர், பின்னர் ஜூன் 1-இல் நடத்த திட்டமிட்டனர்.
நீதிபதிகள்: ஏற்கனவே தேர்வு 2 மாதங்கள் தள்ளிப்போகியுள்ளன. அனைத்து தரப்பினரும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ: தேர்வுக்கு முன்பாக மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டியது அவசியம். பள்ளிகளைத் திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்க, மத்திய அரசு மே மாதம் 13- ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளது. 30% மாணவர்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளனர். எனவே ஜூலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்.
அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன்: இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராக இருக்கிறார். ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
நீதீபதிகள்: லட்சக்கணக்கன மாணவர்களின் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள்? எப்படி வருவார்கள்? எப்படிப் போவார்கள்? ஒரு மாதம் தள்ளிவைக்காமல் தேர்வு நடத்த ஏன் அவசரம் காட்டப்படுகிறது? மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அரசு வக்கீல்: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாணவர்கள் வெளியில் வர வேண்டியதில்லை. அறிக்கை தாக்கல் செய்கிறோம்.
நீதிபதிகள்: தொடர்ந்து அறிக்கை மட்டும் தாக்கல் செய்வதால் என்ன பலன்? மே 3- வது வாரம் அறிவித்தீர்கள் ஆனால் எண்ணிக்கை உயர்வதைக் கவனிக்கவில்லையா? 35 ஆயிரம் பாதிப்பில் 26 ஆயிரம் பேர் வட சென்னையில் மட்டுமே உள்ளனர். ஜூன் 30 வரை ஊரடங்கு உள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் என அனைவரும் இக்காட்டான நிலைக்கு உள்ளாக வேண்டுமா? ஊரடங்கு காலத்திலேயே 10-ஆம் வகுப்புத் தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கின்றீர்கள்? பள்ளிகளைத் திறப்பதிலேயே ஜூலையில்தான் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசு கைட்லைன்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், அதை நீங்களே மீறுவீர்களா? 9 லட்சம் இளம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விசயம் இது.
பள்ளிக் கல்வி சிறப்பு வழக்கறிஞர் முனுசாமி: சில மாநிலங்கள் தேர்வை முன்கூட்டி நடத்திவிட்டன. 11, 12- ஆவது வகுப்புகளுக்குத் தலா ஒரு தேர்வு மட்டுமே உள்ளது.
விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.