சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், "சென்னையில் கரோனா பாதிப்பைக் குறைக்க பகுதிவாரியாகத் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். சென்னை ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதிப்பைக் குறைக்க தனித்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதன் மூலம் 70% நோய்த் தொற்று பரவுகிறது. நோய்த் தொற்று உள்ளவரைத் தொடுவதால் வாய், மூக்கு வழியாகப் பரவுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 80% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. சென்னையில் 65 வார்டுகளில் பத்துக்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் 70,000-க்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வரும் நாள்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கட்டாயம் முகக்கவசம் அணிவதன் மூலம் கரோனா பரவலைத் தடுக்க முடியும். கோடம்பாக்கம், வளசரவாக்கம் சவாலான மண்டலம். இங்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கி வருகிறோம். தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், "சென்னையிலிருந்து 16,000 பேரை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.