சென்னை உள்பட ஐந்து மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் ஏப்ரல் 26- ஆம் தேதி முதல் ஏப்ரல் 29- ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஏப்ரல் 26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிமுதல் ஏப்ரல் 29- ஆம் தேதி புதன்கிழமை இரவு 09.00 மணிவரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
சேலம், திருப்பூர் ஆகிய இரு மாநகராட்சிகளிலும் ஏப்ரல் 26- ஆம் தேதி காலை 06.00 மணி முதல் ஏப்ரல் 28- ஆம் தேதி இரவு 09.00 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். சேலம், கோவை, சென்னை, மதுரை, திருப்பூர் ஆகிய இடங்களை தவிர பிற இடங்களில் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி. மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி. தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல்துறை, காவல்துறை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதியில்லை. மேற்கண்ட பணிகள் தவிர, பிற பணிகளுக்கு முழுயான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது.
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் 33% பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படும். காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி. அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் போன்றவை வழக்கம்போல் செய்ல்படும். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி. தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்.
முழுமையான ஊரடங்கு காலத்தில் நோய்த்தடுப்பு பகுதி கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். நோய்த்தடுப்பு பகுதிகளில் நாள்தோறும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும். முழுமையான ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.