!['' Chairman changed to DMK ... '' - AIADMK members shouted!](http://image.nakkheeran.in/cdn/farfuture/BGS7FXdxkAuoVXhYYWHr0cXXvynaOdnEx0-Qsb_IATA/1630172692/sites/default/files/inline-images/1630063671920.jpg)
புதுக்கோட்டை மாவட்ட குழுவுக்கு திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக இருந்தும் கூட மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் சாதுரியத்தால் குறைவான கவுன்சிலர்களை கொண்ட அதிமுக ஜெயலெட்சுமி வாக்கெடுப்பில் வெற்றி பெற்று சேர்மன் ஆனார். அதேபோல துணை சேர்மன் பதவியையும் திமுக பறிகொடுத்தது.
இந்நிலையில் ஆட்சி மாறியதும் காட்சி மாறத் தொடங்கியது. சேர்மன் ஜெயலெட்சுமி கடந்த வாரம் அமைச்சர் ரகுபதி உதவியோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாவட்ட கவுன்சில் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை வந்த சேர்மன் ஜெயலெட்சுமி தனது அறையில் காத்திருந்தார். ஆனால் கூட்ட அரங்கிற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் சேர்மன் பதவி விலகக்கோரி தொடர் முழக்கமிட்டனர். அதேபோல திமுக கவுன்சிலர்களும் கட்சி மாறி வந்த சேர்மன் பதவி விலக வேண்டும். பதவி விலகும்வரை கூட்டங்களில் பங்கேற்கமாட்டோம் என்று வெளியிலேயே காத்திருந்தனர். இதனால் போதிய கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராததால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
!['' Chairman changed to DMK ... '' - AIADMK members shouted!](http://image.nakkheeran.in/cdn/farfuture/S3Xr7xEW37vCySURjoNouBE46vXQ2BZklO5nqYn0oq0/1630172713/sites/default/files/inline-images/1630063671966.jpg)
இதுகுறித்து திமுக கவுன்சிலர்கள் கூறும்போது, ''திமுக கவுன்சிலர்கள் அதிகம் இருக்கும் போது மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் சூழ்ச்சியால் குறுக்கு வழியில் சேர்மன் ஆன ஜெயலெட்சுமியை திமுக உறுப்பினர்கள் எப்போதுமே ஏற்பதில்லை. இப்போது திமுகவுக்கு வந்தாலும் கூட அவரை சேர்மனாக ஏற்கமாட்டோம். அதாவது திமுக கட்சிக்கு எப்போதும் நாங்கள் துணையாக இருப்போம். ஆனால் சேர்மனை எதிர்ப்போம். அதனால் கட்சி தலைமை திமுக கவுன்சிலரில் ஒருவரை சேர்மன் ஆக்க வேண்டும். அதுவரை கூட்டங்களை புறக்கணிப்போம்'' என்றனர்.
அதிமுக கவுன்சிலர்களோ, ''எங்கள் தயவில் சேர்மனாகிட்டு இப்ப எங்களுக்கே துரோகம் செய்த ஜெயலெட்சுமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுவரை கூட்டத்தை நடத்த விட மாட்டோம்'' என்றனர். திமுக சேர்மனை திமுகவினரே எதிர்ப்பது பரபரப்பாக உள்ளது. அமைச்சர் ரகுபதி சமாதானம் செய்வார் என்று எதிர்பார்க்கிறார்கள்.