கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்ய இன்று வருகை புரிந்துள்ளார். அவரைத் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற நிர்மலா சீதாராமன் அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ள பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்டார். உடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், பாஜக இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு சார்பில் வெள்ள சேத மதிப்பீடு விவரங்களுடன் கூடிய 72 பக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவினை அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர். வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய அரசு கணிசமான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும், மாநில பேரிடர் மேம்பாட்டு நிதியில் உள்ள குறைந்த தொகையைக் கொண்டு பெரும்பாலான சேதங்களை சீர் செய்வது கடினம் எனவும் தமிழக அரசு சார்பில் இந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறு சீரமைப்புக்கு தேவையான நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டதை தெரிவித்து, அந்நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும். மேலும் இந்த பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.