கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு நான்காண்டுகள் கடந்தும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கூட முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையே நீடித்து வரும் நிலையில், எப்போது பணிகள் தொடங்கும் என எவருக்கும் தெரியாத சூழலே உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பினாலும், மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிவித்தது பெரும் விசமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குறித்த ஆர்டிஐ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரவிகுமார் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(ஆர்டிஐ) கீழ் 2014க்கு பிறகு இந்தியாவில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துமவனைகளின் பணிகள் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ரூ. 1977.8 கோடி செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை மத்திய அரசால் மதுரை எய்ம்ஸ்க்காக ரூ.12.35 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மதுரை எய்ம்ஸ்க்கு திட்டமிடப்பட்ட நிதியில் 1 சதவீதத்திற்கும் குறைவான நிதி ஒதுக்கீடாகும். மேலும் அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் தொடங்கப்பட்ட உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்ட்டிரா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிலவற்றில் முழுவதும் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் சில மருத்துவமனைகளில் 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸில் மட்டும் பணிகள் தொடங்கப்படாமலே இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.