![highcourt](http://image.nakkheeran.in/cdn/farfuture/YBCoMkEmmz9nw7b02pl_O9N51Hb3g1L9b4P-UOOgboU/1623241739/sites/default/files/inline-images/highcourt-in.jpg)
தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீப காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் பஞ்சாயத்து அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுவதாகவும், அவர்கள் பஞ்சாயத்து தலைவர் இருக்கைகளில் அமரும் உரிமை மறுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல, ஆவணங்களை கையாள விடாமல் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் தடுக்கப்படுவதாகவும், அவர்களை ஜாதி பெயரை சொல்லி அழைப்பதுடன், பிற சமுதாயத்தைச் சேர்ந்த துணைத் தலைவர்களால் மிரட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதனால் ஜாதிய ரீதியிலான குற்றங்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் எனவும், இது தொடர்பாக தமிழக அரசுக்கோ கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.