நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகியோரின் கொடூரக்கொலையில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு தொடர்பு இருப்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து கார்த்திகேயனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
நேற்று மாலையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று காலை சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை போலீசார் இன்று மாலை 5 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கின்றனர். இந்நிலையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் மற்றும் டிஎஸ்பி அனில்குமார் ஆகியோர் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தற்போது ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அரசியலில் சீனியம்மாளை மகேஸ்வரி வளரவிடாமல் தடுத்தார் அதன் காரணமாகவே நான் தனியாகவே அவர்கள் வீட்டிற்கு சென்று மூவரையும் கொலை செய்தேன். இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்று போலீசார் விசாரணையில் கார்த்திகேயன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.