
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, கோவையில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் விளம்பர பதாகையில் இருந்த இந்தி எழுத்துகளை கிழித்தனர்.
காவிரி மேலாணமை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் கோவை வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மேலும் மத்திய அரசை கண்டித்து கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் விளம்பர பதாகையில் இருந்த இந்தி எழுத்துக்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்றத்தில் இருந்து 200க்கும் மேர்பட்ட வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்று பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வருகின்ற 7ம் தேதி வரை தொடர்ந்து நீதிமன்ற பணி புறக்கணிப்பு நடத்துவது என்றும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்றும் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.