விருதுநகர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ரெங்காபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான கனிஷ்கர் பட்டாசு ஆலை என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மதியம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்து வந்தனர். அப்போது வெடி விபத்து ஏற்பட்டது.
அதேபோல் சிவகாசியில் கிச்சநாயக்கன்பட்டி பகுதியிலும் பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்துகளில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பில், உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவியும், படுகாயம் அடைந்தவர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.