![Case under 5 sections against DMK leader who tried to attack police](http://image.nakkheeran.in/cdn/farfuture/i1i-gt27Q4Ox3cuzXlS9OoFCcFBCd6S8EnuhtG59Vnk/1686201414/sites/default/files/inline-images/1003_97.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் வானக்கண்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் திமுக பிரமுகருமான மதியழகன் அரசு அனுமதி இல்லாமல் பார் நடத்துவதுடன் பரிமளம் என்பவரை வைத்து முழு நேரமும் மது விற்பனை செய்து வருவதையறிந்து ஆலங்குடி டிஎஸ்பி தனிப்படை போலீசார் முத்துக்குமார் மற்றும் மகேஷ்வரன் ஆகியோர் பாரில் ஆய்வு செய்தபோது பரிமளத்தை மதுபாட்டில்களுடன் பிடித்து மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த மதியழகன், பரிமளத்தை கீழே இழுத்து கீழே இறக்கிவிட்டதுடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்து காலணியைக் கழற்றி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதே போல கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவத் தொடங்கியுள்ளது.
போலீசாரை தொடர்ந்து தாக்க முயன்றும் அனுமதி இல்லாமல் பார் நடத்தியும் வரும் மதியழகன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார், முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மதியழகன், பரிமளம் ஆகியோர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்க முயன்றது, காலணியை கழற்றி தாக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.