ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளைத் தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தைக் கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.