![MTC-Bus](http://image.nakkheeran.in/cdn/farfuture/mfu0xYcPFyek1C_UiheJNkkgooT9hPOEjYqvAHN2awY/1533347630/sites/default/files/inline-images/MTC-Bus.jpg)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் பேருந்துகளின் தரத்திற்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பேருந்துகளின் தரம் உயர்த்தப்படவில்லை என கோரிய வழக்கில் மனுதாரர் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக பேருந்துகளை சாதாரண பேருந்து, எக்ஸ்பிரஸ் பேருந்து, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் என தரம் பிரித்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் பேருந்துகள் தரம் பிரிக்கப்படும் அளவிற்கு பொது மக்களுக்கு வசதிகள் செய்து தரப்படுவதில்லை. மேலும் சாதாரண பேருந்துகளிலேயே எக்ஸ்பிரஸ் பேருந்து என ஸ்டிக்கர் மட்டும் ஒட்டி விட்டு கட்டணம் அதிகம் வசூலிக்க படுகிறது. ஆகவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் (மதுரை, விழுப்புரம், சேலம், கோவை, திருநெல்வேலி) மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சி.டி.செல்வம் - நீதிபதி பஷீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரனையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.