
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வைரம், வைடூரியம் மற்றும் அரிய வகை பச்சைக்கற்களைத் தோண்டியெடுக்க முற்பட்ட மலையாளிகள் உட்பட ஐவரை கைது செய்துள்ளது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனத்துறை.
பல அரிய வகை உயிரினங்களையும், எண்ணற்ற ஆச்சர்யங்களையும் தன்னகத்தே உள்ளடக்கியது நெல்லை மாவட்டத்தில் பரந்து விரிந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை. இதில் புலிகள் காப்பகப் பகுதிகளான களக்காடு மற்றும் மணிமுத்தாறு வனப்பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், மரகதப்பச்சை உள்ளிட்டக் கற்கள் இருப்பதாக பரவலான செவி வழி செய்திகள் உண்டு. இதனைக் கைப்பற்ற அவ்வவ்ப்போது பல குழுக்கள் வந்து சென்ற வண்ணமிருந்தால்,. இதனைத் தடுப்பதற்காக வனத்துறையும் ரோந்து செல்வதுமுண்டு.
இந்நிலையில் சொரிமுத்து அய்யனார் கோவிலின் ஆடி அமாவாசைத் திருவிழாவிற்காக வனத்துறை கடுமையாக பல கட்டுப்பாடுகள் விதித்து சோதனையையும் இறுக்கமாக்கியது. இவ்வேளையில், அம்பாசமுத்திரம் சரகம் 2ம் எண் வனத்துறை அணி எலுமிச்சையாறு ஒத்தைப்பணைப் பகுதியில் ரோந்து சென்ற பொழுது சந்தேகத்திற்கிடமான ஐவர் அங்கு குழி தோண்டிக் கொண்டிருந்ததைக் கண்டு, விசாரிக்கையில், "அவர்கள் வைரம் தேடி வந்ததாகவும், அதற்காக தோண்டுவதாகவும் ஒப்புக்கொள்ள, அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்துள்ளனர் வனத்துறையினர்.
தப்பியோடிய சுரேஷை வனத்துறையினர் தேடிவரும் நிலையில், கைது செய்யப்பட்ட பீஜீவ், சந்திரன், அபீராஜ் உள்ளிட்டோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள மகேந்திரன் மற்றும் தங்கவேல் அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.