சென்னை கே.கே. நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் ஆன்லைன் வகுப்பில் வரம்பு மீறி நடந்துகொண்டது போன்ற புகார்களின் அடிப்படையில் கடந்த மாதம் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இப்பள்ளியில் ஏற்பட்ட இந்தப் பாலியல் அத்துமீறல் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான மாணவிகள், முன்னாள் மாணவிகள் தங்களது புகார்களைக் காவல்துறைக்குத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த ஜூன் 25ஆம் தேதி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ராஜகோபாலனின் மனைவி சுதா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த வழக்கில் காவல்துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.