ஆடிக் கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருத்தணியில் குவிந்துள்ளனர்.
பலரும் மொட்டையடித்து, சரவண பொய்கை குளத்தில் நீராடி, பின்னர் காவடி எடுத்து மலைக் கோயிலுக்கு சென்றனர். அதைத் தொடர்ந்து, சுமார் ஐந்து மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முருகப் பெருமானுக்கு பட்டு வஸ்திரங்கள் வழங்கப்பட்டன.
இன்று மாலை சரவண பொய்கை தெப்பக் குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் திருத்தணியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், மருதமலை, பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.