
கவியரசி ஆண்டாள் பிரியதர்ஷினியின் கணவரும், புகழ்பெற்ற சொற்பொழிவாளரும் கவிஞருமான கலைமாமணி பாலரமணியின் நினைவேந்தல் நிகழ்ச்சி, நேற்று (25.11.2021) மாலை சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடந்தது. பாலரமணியின் படத்தைத் திறந்துவைத்து தலைமையுரை நிகழ்த்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தனது உரையில் “ஆண்டாளின் தந்தையாரான பெருங்கவிஞர் நெல்லை ஆ. கணபதி, என் மாணவப் பருவதிலேயே எனக்கு நன்கு அறிமுகமானவர். என் மரபுக் கவிதைகளைப் படித்துப் பார்த்துப் பாராட்டி, என்னை நிறைய எழுதும்படி ஊக்கமூட்டியவர். உன்னிடம் சொல்லாற்றல் இருக்கிறது என்று பாராட்டியவர். அவர் இல்லத்து நிகழ்ச்சியில், நான் பங்கேற்கும்போது, என் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. ஆண்டாளின் காதல், சாதி பார்த்து, மதம் பார்த்து, நிறம் பார்த்து மலர்ந்தது அல்ல. அது உண்மையான காதல். மேம்பட்ட காதல். அதன் விளைவுதான் இந்த நிகழ்ச்சி.
பாலரமணி, பிராமண சமூகத்திலே பிறந்தபோதும், சனாதன எதிர்ப்பாளராக இருந்தார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். அவரைப் பற்றித் தன் நினைவுக் கட்டுரையில் ஆண்டாள் குறிப்பிடும்போது, அவர் திராவிடக் காற்று என்றும் பேரன்பின் ஊற்று என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர், சனாதன எதிர்ப்புப் போராளியாக திகழ்ந்தவர் என்பதுதான் நம் எல்லோரையும் இங்கே இணைத்திருக்கிறது.
மரணம் எல்லோருக்கும் வரும். மூப்பும், நோயும் வந்துதான் தீரும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதை உணர்ந்துதான் நாம் கடக்க வேண்டும். உலகின் மிக மோசமான வலி மரணவலி. மரண பயம்தான் உலகின் உச்ச பயம். நானும் மரண வலியையும் மரண பயத்தையும் உணர்ந்திருக்கிறேன். என் அக்கா வான்மதி, கரோனாவில் மரணமடைந்தபோது அதன் வலி மூன்று மாதங்களுக்கும் மேலாக என்னை நிலைகுலைய வைத்தது. உடன் பிறந்தவர்களின் மரணம், மற்றவர்களின் மரண வலியைவிடக் கூடுதல் வலியை எனக்கு ஏற்படுத்தியது.
ஆண்டாள், தன் துணைவரை இழந்த துயரத்தில் துடிக்கிறார். அந்த வலி அதிகமாகத்தான் இருக்கும். எனக்குக் குடும்பம் இல்லை, மனைவி இல்லை. எனக்கு மனைவி இருந்து, அவர் இறந்திருந்தால், அந்த வலி கூடுதலாகத்தான் இருந்திருக்கும் என்பதை உணர்கிறேன். என் அக்கா மரணமடைந்த நிலையில் எனக்கு வந்த கரோனா, மரண அச்சத்தை எனக்கு உண்டாக்கியது. எப்போதும் வராத மரண அச்சத்தை அப்போது நான் உணர்ந்தேன். அப்போது இது என்ன வாழ்க்கை? நாம் நடத்திய போராட்டங்கள் எல்லாம் எதைச் சாதித்தன? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. உலகமே வெறுமையாகவும், இருளாகவும் தெரிந்தது. உலகமே நமக்கு எதிராகச் சுழல்வது போல் தோன்றியது. அந்தப் பயமும் வலியும் வார்த்தைகளுக்குள் வசப்படாதவை.
தனது வாழ்க்கைத் துணையைப் பறிகொடுத்திருக்கும் ஆண்டாள், அழ மாட்டேன் என்று சொல்லிவிட்டு, பாலரமணியும் தானும் முதன்முதலாக டெல்லியில் சந்தித்தது பற்றிச் சொல்லும்போது அழுதார். அதுதான் உண்மைக் காதல். உண்மைக்காதல் கண்ணீராக, பேரன்பாகத்தான் வெளிப்படும். அவர் தன் துயரங்களை எல்லாம் கடந்து, புதிய எழுச்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று உருக்கமாகவும் அழுத்தமாகவும் தெரிவித்தார்.

நாஞ்சில் சம்பத் தனது பேச்சில், “எல்லோருக்கும் மரணம் வரும். இன்று அவர், என்றால் நாளை நான். அதை ஏற்றுக்கொண்டுதான் வாழ வேண்டும். மரணத்தோடு சமரசம் செய்துகொண்டுதான் நாம் வாழ வேண்டும். புறநானூற்றில், ஒல்லையூர் நாட்டை ஆண்ட பெருஞ்சாத்தன் மறைந்தபோது, அந்த நாட்டில் முல்லைப்பூ பூத்ததைப் பார்த்த ஒரு புலவர், உனக்கு இங்கிதம் இல்லையா? நாடே துயரத்தில் மூழ்கியிருக்கும்போது முல்லைப் பூவே நீ எதற்காகப் பூத்தாய். துயரத்தில் இருக்கும் மக்கள் எப்படி உன்னைச் சூடுவார்கள்? முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று அதை எழுதிய புலவன் கேட்டான். மரணம் அங்கே இலக்கியமானது. மரண வலிகளைக் கடந்தும், மறந்தும் ஆண்டாள் புதிய வேகத்தோடு நடைபோட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் பாலரமணி எழுதிய ‘தமிழ் இலக்கியத்தின் வரலாறு’ என்ற நூலும், ‘என் இனிய பாலா’ என்ற தலைப்பில், தன் கணவர் பற்றி ஆண்டாள் பிரியதர்ஷினி தொகுத்த நினைவு மலரும் வெளியிடப்பட்டன. வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி. சந்தோஷம், மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன், ஆரூர் தமிழ்நாடன், மை.பா. நாராயணன், கவிஞர் இளம்பிறை உள்ளிட்டோர் நினைவுரைகளை வழங்கினர்.
ஏற்புரையாற்றிய ஆண்டாள் பிரியதர்ஷினி, “என் உயிரனைய பாலா இங்கேதான் இருக்கிறார். எங்கோ இருந்து அவர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார். மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்த பின்னரும் கூட, இன்று ஒன்றாம் தேதி என்பதையும், தன் பிறந்தநாளையும், என் பிறந்தநாளையும் தேதி வாரியாக எழுதிக் காட்டினார். அவர் மரணத்தை உணர்ந்துதான், அவசர அவசரமாக ‘தமிழ் இலக்கியத்தின் வரலா’றை எழுதியிருக்கிறார். அவரின் பிரிவு வலி தாங்க முடியாதது என்றாலும், அனைவரும் தந்திருக்கும் ஆறுதலால், நான் மனம் தேறுகிறேன். இனி என் கண்களில் கண்ணீர் வராது. புத்தெழுச்சியோடு இயங்குவேன்” என்றெல்லாம் நெகிழ்ந்தும் கலங்கியும் கண்ணீர்விட்டும் தன் உணர்வுகளைக் கொட்டினார். உருக்கமான நிகழ்ச்சியில் அத்தனை பேரின் உரையிலும் பாலரமணியின் புன்னகை முகம் தெரிந்தது.