![cannabis seller 3 arrested in kanyakumari](http://image.nakkheeran.in/cdn/farfuture/hJrqAak8eHsMRmC1yzf-VqwB51Xwxg4rRiHk0nqkYns/1603514760/sites/default/files/inline-images/ng.jpg)
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. போலீசுக்குப் பயந்து மறைத்து விற்கபட்ட கஞ்சா, தற்போது பஸ் நிலையம், பள்ளி, கல்லூரி வாசல்கள், இளைஞா்கள் அதிகம் கூடுகிற மால் போன்ற இடங்களில் விற்பனை செய்துவருகிறார்கள். இதனால் தெருவுக்குத் தெரு கஞ்சாவுக்கு அடிமையாகுபவர்களின் தொந்தரவும் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இந்நிலையில் தற்போது கஞ்சா ஆயிலை கண்டு பிடித்துள்ளனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையம் அருகில் 8 பேர் கொண்ட ஒரு கும்பல் தனித் தனியாக போதைப் பொருட்கள் விற்றுக் கொண்டிருந்ததையும் அதைப் பலர் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருந்ததையும், ஒரு பெண் ஆசிரியை பார்த்து, வடசேரி போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனே போலீசார் அங்கு வந்து அனீஷ், பிரவீன், கோகுல் கிருஷ்ணா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மற்ற 5 பேர் தலைமறைவாகிவிட்டனர்.
இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறும் போது, கஞ்சா செடியின் சில பாகங்களில் இருந்து எடுக்கப்படும் ஒருவகையான திரவத்தை எடுத்து அதிலிருந்து போதைப் பொருள் தயாரிக்கிறார்கள். இந்தப் போதை ஆயிலை கா்நாடகா மற்றும் மராட்டியத்தில் இருந்து வாங்கி வருகிறார்கள். இந்த போதைப் பொருளை சிகரெட் மூலம் பயன்படுத்துகிறார்கள்.
இதைப் பயன்படுத்தும்போது கஞ்சா போன்ற வாசனையை ஏற்படுத்தாது. அதனால் எந்தக் கூட்டத்தில் நின்றும் சாதாரணமாக சிகரெட் போல் பயன்படுத்துகிறார்கள். இந்த கஞ்சா ஆயில் 50 மில்லி 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி வந்து 40-ல் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறார்கள் என்றனர். இந்தக் கும்பலைச் சேர்ந்தவா்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கஞ்சா ஆயில் விற்பனை செய்து வருகிறார்கள் என்றனர்.