![Cannabis dealer escapes from police custody](http://image.nakkheeran.in/cdn/farfuture/JK7lhaAq0ZB0yyzf0DsbK8X97SLwYRaNHOHYkFszuio/1604660434/sites/default/files/inline-images/kallakurichi-in_23.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாவந்தூர் அரசுப் பள்ளி அருகே கஞ்சா பொட்டலம் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 42 வயது ரஜினி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யும் நடைமுறை நள்ளிரவு வரை நீடித்தது. அதனால், இரவு நேரத்தில் ரஜினியை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பது சாத்தியமில்லை என்பதால், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கஞ்சா வியாபாரி ரஜினியை அன்று இரவு தனது பொறுப்பில் அழைத்துச்சென்று தனியார் லாட்ஜில் தங்க வைத்து மறுநாள் காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், அதிகாரிகளிடம் கூறிவிட்டு அவரை அழைத்துச் சென்றார்.
அதன்படி, லாட்ஜில் கஞ்சா வியாபாரி ரஜினியுடன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தூங்கும்போது, கஞ்சா வியாபாரி ரஜினி தப்பி ஓடிவிட்டார். இதனால் பதற்றமடைந்த பிரபாகரன், இத்தகவலை மேலதிகாரிகளுக்கு கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் உத்தரவின்படி சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் தப்பி ஓடிய ரஜினியை தேடிச் சென்றனர். அவர் தனது வீட்டில் மறைந்து இருந்ததைக் கண்டு அவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், கஞ்சா வியாபாரியை தப்ப விட்ட சம்பவத்திற்காக சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் பாலமுரளி திருநாவலூர் காவல் நிலையத்திற்கும், திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர், வரஞ்சரம் காவல் நிலையத்திற்கும் பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.