![Cancellation of 10.5% quota for Vanniyar case Adjourn tomorrow](http://image.nakkheeran.in/cdn/farfuture/4qzK70GeuaEKqvRlFjLyDDSGSPmENc0gMYdGacy-xAE/1644920726/sites/default/files/inline-images/182_2.jpg)
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, சட்டத்தை அமல்படுத்தியது.
இந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தந்தது செல்லாது எனத் தீர்ப்பளித்து தமிழ்நாடு அரசின் வன்னியருக்கான் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உள்ஒதுக்கீடு வழக்கை பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்காமல் தற்போதையை அமர்வு முடிவு செய்ய முடியாதா என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். பெரிய அமர்வுக்கு வழக்கை பரிந்துரைப்பது குறித்து தற்போதைய அமர்வுதான் முடிவு செய்ய முடியும் என்று தெரிவித்த தமிழக அரசு, பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமெனில் அது பற்றி தங்களின் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கை நாளை விசாரிப்பதாகக் கூறி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.