அண்மைகாலமாக பொதுவெளியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரமானது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். அதனைத் தொடர்ந்து போலீசார் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்வர். சமீபமாக இதுபோன்று சம்பவங்கள் பெரிய அளவில் நிகழாத வண்ணம் இருந்த நிலையில், கோவையில் இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்து அது தொடர்பாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சில தினங்களுக்கு முன்பு இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குழந்தையின் கையில் பட்டாக்கத்தியைக் கொடுத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இதே மாதத்தில் மூன்றாவது முறையாக இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதற்காக கும்பலோடு கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே சித்தன்காட்டு காளியம்மன் கோவில் பகுதியில் பிரபு என்ற இளைஞர் அவரது நண்பருடன் சேர்ந்து கொண்டு நள்ளிரவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் 8 பேரையும் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைத்தனர்.