சேலம் மாநகரில் குற்றங்களை ஒடுக்கும் வகையிலும், பொதுமக்கள் அச்சமின்றி நடமாடவும் குற்றப்பின்னணி உள்ள மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் குண்டர்களை காவல்துறை ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் தேடித்தேடி கைது செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் நடந்த அதிரடி வேட்டையில் பல ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது நடந்த வேட்டையில் பலர் தப்பிய நிலையில், அவர்களை பிடிக்க துணை ஆணையர் தங்கதுரை மேற்பார்வையில் சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு சரக உதவி ஆணையர்கள் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
பிப்ரவரி 14ம் தேதி (வியாழன்) இரவு முதல் மாநகரில் உள்ள குற்றப்பின்னணி உள்ள ரவுடிகளை தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டன.
காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில் ஒரே நாளில் 57 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் கிச்சிப்பாளையம் காவல் எல்லையில் மட்டும் 14 பேரும், சூரமங்கலம் எல்லையில் 9 பேரும் அடங்குவர் என்கிறது மாநகர காவல்துறை.
கைது செய்யப்பட்டவர்களில் பஞ்சந்தாங்கி ஏரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற மெட்ராஸ் கோவிந்தன் மீது மட்டும் திருட்டு, அடிதடி என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர் மீது 2009 முதல் காவல்துறையில் தனியாக ஹிஸ்டரி ஷீட் எனப்படும் போக்கிரித்தாள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் செவ்வாய்பேட்டை ரமேஷ், அன்னதானப்பட்டி சரவணன் ஆகியோர் மீதும் போக்கிரித்தாள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கிச்சிப்பாளையம் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகளில் சிலம்பரசன், விக்கி என்கிற விக்னேஷ்வரன், குட்டி என்கிற மோசஸ், பிரபு என்கிற மொட்டையன், ஜீசஸ் என்கிற ராஜேந்திரன் ஆகியோர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கைதான சிலர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.