அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை கொண்டு தேர்தல் நடத்துகிறார்கள் என்று விக்கிரவாண்டியில் போட்டியிடும் இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. இங்கு அ.தி.மு.க.- தி.மு.க. மற்றும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குனருமான கவுதமன் உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். இதேபோல் கவுதமனும் பூத்துகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் 233 வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து கொண்டிருந்தனர். கவுதமன் அந்த பூத்துக்கு வந்தார். அங்கு அதிகமாக ஏஜெண்டுகள் இருந்ததால் அவர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதைபற்றி தகவல் அறிந்ததும் வெளியில் நின்ற போலீசார் உள்ளே சென்று வாக்குவாதம் செய்த இயக்குனர் கவுதமை வெளியே அழைத்து வந்தனர்.
அதன் பின்னர் இயக்குனர் கவுதமன் கூறியதாவது, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் 50 ஆண்டு காலமாக வைத்துள்ள பணத்தை கொண்டு தேர்தல் நடத்துகிறார்கள். அக்கிரமம் அதிகம் நடக்கிறது. ஒவ்வொரு பூத்திலும் ஒவ்வொரு கட்சி சார்பில் 1 ஏஜெண்ட்டு இருப்பது வழக்கம். ஆனால் இங்கு அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் 6-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு காவல் துறை உதவியாக இருக்கிறது என்றார்.