புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜமால் முகமது (50). இவரை இன்று காலை 5 மணிக்கு பள்ளிவாசலில் தொழுகைக்கு செல்லும் போது மர்ம நபர்கள் கடத்திவிட்டதாக அவரது மகன் முகமது யாசர் கோட்டைப்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகார் பற்றி எஸ்.பி. செல்வராஜ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் சோதனைகள் தொடங்கியது. இந்த நிலையில் கடத்தல்காரர்கள் சென்ற கார்கள், பயன்படுத்திய செல் எண்களை வைத்து அவர்கள் வடகாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருகாக்குறிச்சி கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன் படி ஆலங்குடி டி.எஸ்.பி. முத்தலிபு தலைமையிலான வடகாடு போலிசார் மற்றும் ஆலங்குடி போலிசார் கருக்காக்குறிச்சி கிராமத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தென்னந்தோப்பில் கார்கள் நிற்பது தெரிந்தது. அங்கு போலிசார் செல்லும் போது அங்குள்ள ஒரு கொட்டகையில் ஜமால் முகமதுவை விட்டுவிட்டு அனைவரும் அந்தப் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் மறைந்துவிட்டனர். ஜமால் முகமதுவை மீட்ட போலிசார் அறந்தாங்கி டி.எஸ்.பி. தெட்சிணாமூர்த்தியிடம் ஒப்படைத்துவிட்டு கடத்தல்காரர்களை கரும்பும் தோட்டத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒவ்வொரு நபராக 6 பேர் பிடிபட்டனர். கோட்டாக்குடி முத்துக்குமார், கோபி கூடல் நகர் மதுரை, ஐயப்பன் மணக்காடு பேராவூரணி, மணிவாசகம் கருக்காக்குறிச்சி, முத்துவேல் கருக்காக்குறிச்சி, ஹரிகரன் சிலைமான் மதுரை ஆகிய 6 பேரையும் கைது செய்த போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.
இதில் முதல்கட்ட விசாரனையில் முத்துக்குமார் கூறும் போது.. நானும் ஜமால் முகமதுவும் மீன் வாங்கி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறோம். பல ஆண்டுகளாக ஒன்றாகவே தொழில் செய்து வந்தோம். புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகள் வாங்கியுள்ளோம். ஆனால் அனைத்து ஆவணங்களும் ஜமால் முகமதுவிடமே இருந்தது.
இந்த நிலையில் இருவரும் பிரிந்து தொழில் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டதால் என் பங்கை பிரித்து கொடுக்கும்படி கேட்டேன். கொடுக்கவில்லை. சொத்துக்களையாவது கொடு என்று கேட்டேன் தரவில்லை. அவசரமாக பணம் தேவைப்பட்டதால் ரூ. 25 லட்சம் கேட்டேன். இப்படி எங்களுக்குள் பல பிரச்சனைகள் உருவானதால் பங்குத் தொகையை பெறவே கூலிப்படையை வைத்து கடத்தினேன். என்ப பங்கை பிரித்து கொடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்று முதல்கட்ட விசாரணையில் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து விசாரனை நடந்து கொண்டிருக்கிறது.
தொழிலதிபர் கடத்தப்பட்ட 5 மணி நேரத்தில் எந்த பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டதால் போலிசாரை பொதுமக்களும் ஜமால் முகமது உறவினர்களும் பாராட்டினார்கள். இதே போல கடந்த மாதம் நித்தியானந்தாவின் பக்தர் கடத்தப்பட்டும் உடனடியாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.