திருவிழா என்றால், ஏதோ ஒரு இடத்தில், அதுவரை அங்கு இல்லாத குடை ராட்டினம், சுழல் ராட்டினம், வளையல், தோடு, செயின் விற்கும் ஃபேன்ஸி கடை, ரெடிமேட் கடை, பலகாரக்கடை, சர்பத் கடை என பலவும் ஒரே நாளில் திடீரென்று முளைத்துவிடும். தேர்தல் திருவிழாவும் அதுபோலத்தான். ஆச்சரியமூட்டும் அத்தனையும் நடக்கும். தலைவர்கள், வேட்பாளர்களெல்லாம் சாமானிய மக்களைப் பார்த்து கும்பிடு போடுவார்கள். வாஞ்சையாகத் தோளில் கை போடுவார்கள். எங்கோ தள்ளியிருந்தாலும் அழைத்துப் பேசுவார்கள். கோரிக்கை என்னவென்று பரிவுடன் கேட்பார்கள். நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளிப்பார்கள். ஏதோ ஒருவிதத்தில் வாக்காளர்களைக் கவர்ந்துவிட முயற்சிப்பார்கள்.
அப்படி நம் தலைவர்கள் வாக்காளப் பெருமக்களிடம்
‘பல்ஸ்’ பார்த்த காட்சிகளின் தொகுப்பு இதோ –
1) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையில் குல்லா அணிந்து பார்த்திருக்கிறோமா? நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை சரவணனுக்காக, கூத்தாநல்லூர் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய பெருமக்களிடம் குல்லா அணிந்து வாக்கு கேட்டார். அப்போது, புர்கா அணிந்து முகத்தை மறைத்திருக்கும் பெண் ஒருவரால் எடப்பாடி பழனிசாமியோடு குஷியாக செல்ஃபி எடுத்துக்கொள்ள முடிந்தது.
2) சாதாரண நாட்களில் தெருவில் இறங்கி நடந்து வருவாரா கனிமொழி? ஏழை எளிய மக்களால் கனிமொழியின் கைகளைப் பிடித்து தங்கள் கன்னத்தில் வைத்துக்கொள்ள முடியுமா? இந்தக் காட்சிகளெல்லாம் தூத்துக்குடியில் கனிமொழி வாக்கு சேகரித்தபோது அரங்கேறின.
3) “திருப்பதி ஏழுமலையான் இருக்கிற இடத்திலே பவுத்த விகார் கட்ட வேண்டும்; திருவரங்கநாதன் படுத்திருக்கிற இடத்திலே புத்த விகார் கட்ட வேண்டும்; காஞ்சி காமாட்சியம்மன் கோவில் இருக்கின்ற இடத்திலே புத்த விகார் கட்ட வேண்டும். இந்தியா முழுவதும் இருக்கின்ற சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடத்திலே ஒரு காலத்தில் பவுத்த விகார்களாகவும், சமண கோவில்களாகவும் இருந்தன. தமிழ்நாடு பெரியார் மண். சனாதன சக்திகள் இங்கு வேரூன்ற முடியாது. இரண்டு கோட்பாடுக்களுக்கு இடையில் யுத்தம் நடக்கிறது. ஒன்று சனாதன கோட்பாடு. இன்னொன்று ஜனநாயக கோட்பாடு. சனாதனமா? சனநாயகமா?” என்று கேள்வி எழுப்பி, தேசம் காப்போம் என்ற பெயரில் மாநாடு நடத்தியவர் திருமாவளவன். தற்போது சிதம்பரம் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார் அல்லவா? அதனால், பூனூல் அணிந்திருக்கும் தீட்சிதரை திருநீறு பூசவைத்து, ஆசி பெறுகிறார்.
4) “மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் லஞ்சம், ஊழலை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மக்கள் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை. பதவிதான் முக்கியம். டெல்லியிலிருந்து சொல்வதைக் கேட்டு அப்படியே செயல்படுகிறது எடப்பாடி அரசு. அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சொந்த தொகுதியில் டெபாசிட் இழப்பார்.” என்றெல்லாம் விளாசியிருக்கிறார் அன்புமணி. தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அந்த அன்புமணிக்காக திறந்த வேனில் அவர் பக்கத்தில் நின்றபடி வாக்கு கேட்டார் எடப்பாடி பழனிசாமி.
5) ‘நமக்கு நாமே’ எனச்சொல்லி சாலையோர கடைகளில் அவ்வப்போது டீ குடிப்பார் மு.க.ஸ்டாலின். கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாருக்காக வாக்கு சேகரித்தபோது, குழந்தை ஒன்றை மடியில் அமரவைத்து டீ குடித்தார். அப்போது, ஒரு சாமானியப் பெண்ணால் மு.க.ஸ்டாலினுடன் கைகுலுக்கிப் பேச முடிந்தது.
6) இந்தி திரைப்பட உலகின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் ஹேமமாலினி. பா.ஜ.க. சிட்டிங் எம்.பியான அவர், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவுக்கும் எனக்கும் தெய்வீக உறவு உள்ளது எனக் கூறிவரும் அவர், அத்தொகுதியில் வயல் காட்டில் அறுவடை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடமிருந்து, அரிவாளையும் அறுக்கப்பட்ட கதிர்களையும் வாங்கி தானே எடுத்துச் செல்கிறார்.
தேர்தல் திருவிழா வந்துவிட்டதால், வாக்காளர்களைத் திணறடிக்கும் அளவுக்கு படை யெடுக்கிறார்கள் அரசியல்வாதிகள்! இதற்குமுன் நாம் கண்டிராத பாசத்தலைவர்களாக உருமாறிவிடுகிறார்கள்!