ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இவ்வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்,மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் உள்ளது.
குறிப்பாக பண்ணாரி சோதனைச்சாவடி முதல் திம்பம் மலை அடிவாரம் வரை உள்ள சாலையோர வனப்பகுதியில் யானைகள் இரவு நேரத்தில் மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் கூட்டம் கூட்டமாக உலவுகின்றன. கர்நாடகா மாநிலம் மற்றும் தாளவாடியிலிருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தமிழகம் நோக்கி லாரிகள் வருகிறது. அப்படி வரும் லாரிகளின் ஒட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் லாரிகளில் இருந்து கரும்பு கட்டுகள் சிலவற்றை யானைகள் சாப்பிடுவதற்காக சாலையோரம் வீசிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த கரும்புத்துண்டுகளை யானைகள் சாப்பிட்டு அவையின் சுவையை ருசித்து பழகியதே இதற்கு காரணம் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதை 1 வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரம் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் லாரியில் இருந்த கரும்புகள் சிதறி சாலையோர வனப்பகுதியில் குவிந்து கிடக்கிறது. இந்த கரும்புகளை தின்பதற்காக இப்போது யானைகள் கூட்டம் கூட்டமாக அப்பகுதியில் முகாமிட்டபடி கரும்புதுண்டுகளை தும்பிக்கையால் எடுத்து ருசித்து தின்கின்றன. யானைகள் கூட்டமாக நிற்பதைக்கண்ட வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
கரும்பின் சுவையை சாப்பிட்டு பழகிய யானைகள் கரும்பு லாரிகளுக்காக சாலையோரம் அலைகிறது. காட்டில் கிடைக்கும் பழங்கள், மூங்கில் குருத்துகள் என இயற்கை உணவு உண்ட இந்த காட்டு யானைகளை கரும்பு திங்க அவைகளின் தும்பிக் "கை" யை ஏந்த வைத்து விட்டது மனித கூட்டம்.